Pages

Thursday 24 June 2010

பெண்களின் ஆடை

பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது பற்றி அல்குர்ஆனும் ஸுன்னாவும் விளக்குகின்றன.

01. அவ்ரத்

பெண் முழுமையாக மறைப்புக்குரியவள், அவளின் முழு உடலும் அவ்ரத் ஆகும் என்ற ஸுனனுத் திர்மிதியில் பதிவாகியுள்ள ஹதீஸின் அடிப்படையில் ஒரு பெண் தனது உடலை முழுமையாக மறைக்கும் விதத்தில் ஆடை அணிதல் வேண்டும். இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

''மேலும் (நபியே!) முஃமினான பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்;; தங்களது வெட்கத் தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். தங்களது அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும். அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர. மேலும் தங்களுடைய மார்புகள் மீது முந்தானைகளைப் போட்டுக் கொள்ளட்டும்.''(அந்நூர்:31)

மேலே குறிப்;பிட்ட அல்குர்ஆன் வசனத்தில் இடம்பெற்றுள்ள 'வெளியில் தெரிவன' என்பதன் விளக்கம் என்ன என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. இது வெளியே தெரியும் ஆடைகள் முதலான தவிர்க்க முடியாமல் வெளியே தெரியக் கூடியவற்றைக் குறிக்கும் என இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கருதுகின்றார்கள். இமாம்களான ஹஸன் அல்பஸரி, இப்னு ஸீரின், நஸாஈ போன்றோரும் இக்கருத்தையே கொண்டுள்ளார்கள். இங்கு 'வெளியே தெரிவன' என்பது முகத்தையும் இரு கைகளையும் குறிக்கும் என்பது இப்னு உமர் (ரழி) அவர்களின் கருத்தாகும். ழஹ்ஹாக், இக்ரிமா, அதா (ரஹ்) ஆகியோரும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர். மற்றும் சிலர், இது வெளியே தெரியக்கூடிய மோதிரம், கழுத்துச் சங்கிலி போன்றவற்றைக் குறிக்கும் என்று அபிப்பிராயப்படுகின்றனர்.

பொதுவாக ஓர் இஸ்லாமியப் பெண் முகத்தையும் இரு கைகளையும் மூடாமல் திறந்துவிடுவது தொடர்பான சட்டப்பிரச்சினை மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் இடம்பெற்றுள்ள 'வெளியே தெரிவன தவிர' என்ற சொற்றொடரை வைத்தே எழுந்துள்ளது. சுருங்கக் கூறின் இது விடயத்தில் இரு கண்ணோட்டங்கள் காணப்படுகின்றன.

a. முகமும் கரங்களும் கூட தெரியலாகாது. அதனால் முகத்தையும் கரங்களையும் மறைக்க வேண்டும்.

b. முகத்தையும் கரங்களையும் மூட வேண்டிய அவசியம் இல்லை.
பெரும்பாலான ஆரம்பகால இமாம்கள் இரண்டாம் கருத்தையே கொண்டுள்ளனர். இவர்கள் தமது நிலைப்பாட்டுக்கு முன்வைக்கும் சான்றுகளில் ஒரு ஹதீஸ் குறிப்பிடத்தக்கது. அது பின்வருமாறு:

ஒரு முறை அஸ்மா பின்த் அபீபக்ர் (ரழி) அவர்கள் ஒரு மெல்லிய ஆடை அணிந்து ரஸூலுல்லாஹ்விடம் வந்திருந்தார்கள். இதைக் கண்ட நபியவர்கள் உடன் தனது திருமுகத்தைத் திருப்பிக்கொண்டு பின்வருமாறு கூறினார்கள்:

'அஸ்மாவே! ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளின் உடலில் இதனையும், இதனையும் தவிர வேறு எப்பகுதியும் வெளியே தெரியலாகாது' என்று கூறி தனது முகத்தையும் இரு கரங்களையும் காண்பித்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ஸுனன் அபீதாவூதில் பதிவாகியுள்ளது.ஆயினும் முகமும், கரங்களும் கூட 'அவ்ரத்' எனக் கூறும் உலமாக்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள ஒரு கோளாறைச் சுட்டிக்காட்டி இதனை ஒரு பலவீனமான ஹதீஸ் எனக் கூறுகின்றனர்.

பொதுவாக ஒரு பெண் தனக்கோ தன் மூலம் பிறருக்கோ 'பித்னா' ஏற்படாது என்று காண்கின்றபோது தனது முகத்தையும் கைகளையும் மூடாமல் திறந்துவிட அனுமதி பெறுகிறாள். ஆனால் கவர்ச்சியும் அழகும் உள்ள ஒரு பெண் ஒரு பக்குவமற்ற சமூகத்தில் முகத்தையும் கைகளையும் கூட மறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை பெரும்பாலான அறிஞர்கள் கொண்டுள்ளார்கள். இங்கு கைகள் என்பது மணிக்கட்டுக்கு கீழ் உள்ள பகுதியையே குறிக்கும். அதற்குமேல் உள்ள பகுதி அவ்ரத் ஆகும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

02. கனமான ஆடை

பெண்களின் ஆடைக்குரிய இரண்டாம் நிபந்தனை அணியும் ஆடை கனமானதாக இருத்தல் வேண்டும் என்பதாகும். மேனியை - உடலமைப்பை வெளிக்காட்டும் மெல்லிய துணியாக அது இருத்தல் கூடாது. ஆடை மெல்லிய துணியால் அமைந்திருப்பதை ஒரு வகை நிர்வாணமாக இஸ்லாம் கருதுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'எனது உம்மத்தில் பிந்திய காலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள். அவர்கள் ஆடை அணிந்த நிர்வாணிகளாக இருப்பார்கள். அவர்களின் தலைகளின் மேல் ஒட்டகங்களின் திமில் போன்றவை (தலைமுடி வைக்கப்பட்டு) இருக்கும். அவர்களைச் சபியுங்கள். நிச்;சயமாக அவர்கள் சபிக்கப்பட்ட வர்களே. (அல்லது சபிக்கப்பட வேண்டியவர்களே.)'(அத்தபரானி)

மெல்லிய ஆடை அணியும் பெண்கள் தமது உடலின் வனப்பை, கவர்ச்சியை வெளிக்காட்டுபவர்களாவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக காட்சி தருபவர்களாவர் என்ற கருத்தையே நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸின் மூலம் சொல்கின்றார்கள் என இமாம் ஸுயூத்தி கூறுகின்றார்கள்.

இவ்வாறு அரைகுறையாக ஆடை அணியும் பெண்களை எச்சரிக்கும் மற்றுமொரு ஹதீஸும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

'இரு பிரிவினர் நரகவாதிகள் ஆவர். அவர்களை நான் கண்டதில்லை. (அவர்களுள்) ஒரு சாரார் மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பர். அவற்றைக் கொண்டு மக்களை அவர்கள் அடிப்பர். மறுசாரார் உடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவர். அவர்கள் (தீய வழியில்) செல்வதுடன் (பிறரையும்) தீய வழியில் செலுத்துவர். அவர்களின் தலைகள் ஆடி அசையும் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று காணப்படும். இத்தகையவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள்.' (முஸ்லிம்)

03. இறுக்கமற்ற உடை

பெண்களின் ஆடைக்குரிய மூன்றாம் நிபந்தனை அணியும் ஆடை இறுக்கமானதாக உடலுடன் ஒட்டியதாக இருத்தல் கூடாது. மாறாக தளர்வாக, தாராளமானதாக, பெரிதாக இருத்தல் வேண்டும். ஆடை இறுக்கமாக இருந்தால் அது உடலமைப்பைக் காட்டும். இது பெண்ணுக்குரிய இஸ்லாமிய உடையின் நோக்கத்தைப் பாழ்படுத்தி விடும்.

'பெண்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும்' என்ற அல்குர்ஆனின் கட்டளை அருளப்பட்டபோது பெண்கள் தம் மெல்லிய ஆடைகளை கைவிட்டனர். தடித்த (கம்பளி போன்ற) துணிகளால் முந்தானைகளைத் தயாரித்துக் கொண்டனர் என ஆஇஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். (அபூதாவுத்)

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தனக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு எகிப்திய ஆடையை உஸாமா (ரழி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். அவர் அதனை தனது மனைவிக்கு அணியக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள், நீர் அணியவில்லையா? என உஸாமாவிடம் கேட்டபோது, அதனை அவர் தனது மனைவிக்குக் கொடுத்து விட்டதாகக் கூறினார். அப்போது அன்னார், 'அதனை அணியும்போது அதனுள்ளே ஓர் உள்ளாடையை அணிந்து கொள்ளும்படி கூறும். ஏனெனில் அது அவளது உடலின் கட்டமைப்பை காட்டுவதாக இருக்குமோ என நான் அஞ்சுகின்றேன்' என்றார்கள். இந்த ஹதீஸை இமாம்களான அஹ்மத், அத்தபரானி, அல்பைஹகி, இப்னு ஸஅத் ஆகியோர் பதிவு செய்துள்ளனர். இந்த ஹதீஸ் பலவீனமான ஒன்று என சிலர் கூறியபோதும் இமாம் தஹபி போன்றவர்கள் இந்த ஹதீஸின் நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளனர்.

04. மணம் பூசாமை

பெண்கள் தாம் அணியும் ஆடைகளுக்கு நறுமணம் பூசக்கூடாது என்பதும் மற்றுமொரு நிபந்தனையாகும். இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்:

'ஒரு பெண் மணம் பூசி, அதன் நறுமணத்தை ஒரு கூட்டத்தினர் நுகரும் வகையில் அவர்களைக் கடந்து செல்வாளாயின் அவள் ஒரு விபசாரியாவாள்.'

ஆயினும் ஒரு பெண் வீட்டில் தனது கணவனுக்கு முன்னாலும் குழந்தைகள், மஹ்ரமிகளுக்கு மத்தியில் இருக்கும் போதும் நறுமணங்களைப் பூசிக் கொள்வதில் தவறில்லை. அவ்வாறே வெளியிலும் துர்நாற்றம் வீசும் நிலையில் அதனைப் போக்கிக் கொள்ளும் அளவுக்கு மாத்திரம் இலேசாக நறுமணம் பூசிக்கொள்ளவும் அனுமதி உண்டு.

05. ஆண்களுக்கு ஒப்பாகாதிருத்தல்

பெண்களின் ஆடை ஆண்களின் ஆடையை ஒத்ததாக இருத்தல் கூடாது என்பதும் ஒரு நிபந்தனையாகும். இதற்கு பின்வரும் நபிமொழிகள் ஆதாரங்களாக உள்ளன:

'ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் எங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல.' (அஹ்மத், நஸாஈ, ஹாகிம்)

'நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்குரிய ஆடைகளை அணியும் ஆண்களையும், ஆண்களுக்குரிய ஆடைகளை அணியும் பெண்களையும் சபித்தார்கள்.' (அபூதாவுத், இப்னுமாஜா, ஹாகிம்)

'மூவர் சுவனம் புகமாட்டார்கள். அல்லாஹ் மறுமையில் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (அவர்கள் யாரெனில்) தனது பெற்றோருக்கு அநியாயம் செய்தவன், ஆண்களைப் போன்று நடந்து கொள்ளும் பெண், தனது மனைவி விபசாரத்தில் ஈடுபடுவதை அங்கீகரித்து அதற்கு ஒத்தாசையாக இருப்பவன் ஆகியோராவார்.'(அஹ்மத், இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்)

06. காபிர்களுக்கு ஒப்பாகாதிருத்தல்

காபிரான பெண்களின் ஆடைகளை ஒத்ததாகவும் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை அமைதல் கூடாது. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:

'நான் மஞ்சள் நிறத்திலான இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இவை காபிர்களுடைய ஆடைகள். எனவே இவற்றை அணியாதீர்!' என்றார்கள். (முஸ்லிம்)

07. எளிமையானவை

சமூகத்தில் புகழையும் பிரபல்யத்தையும் நாடி காலத்திற்குக் காலம் வரும் நவீன வடிவமைப்புக்களில் ஆடை அணிவதும் தவிர்க்கப்படல் வேண்டும். அணியும் ஆடை பல வர்ணங்களிலும், நிறங்களிலும் வேலைப்பாடு களுடனும் கூடியதாக அமையாமல் எளிமையானதாகவும் கவர்ச்சியற்றதாகவும் இருத்தல் வேண்டும்.

இதுவரை நாம் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்ட ஆடையே ஒரு பெண்ணுக்குரிய இஸ்லாமிய உடையாகும்.

ஓர் இஸ்லாமியப் பெண் வெளியில் செல்லும் போது மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து செல்லல் வேண்டும். ஷரீஅத் கூறும் ஹிஜாப் உடைக்கான மேற்குறிப்பிட்ட நிபந்தனைகள் குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் பெறப்பட்டவையாகும்.

ஹிஜாபின் பயன்கள்

பெண்கள் மேற்குறிப்பிட்ட ஷரீஆ வரையறைகளைப் பேணி உடையணிவதனால் அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் அடையும் நன்மைகளும் பயன்களும் அளப்பரியன. உண்மையில் பெண்களுக்கு இஸ்லாம் வரையறை செய்துள்ள 'ஹிஜாப் உடை அவர்களுக்கு ஒரு கௌரவமாகும். அது அவர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்த்தையும், மதிப்பையும் பெற்றுக்கொடுக்கிறது. ஒரு பெண்ணின் கற்பொழுக்கத் திற்கும், அடக்கத்திற்கும், நாணத்திற்கும் அவள் அணியும் ஹிஜாப் உடை சான்றாக விளங்குகிறது. இதனால் அவளை காண்போர் அவளை மதிக்கிறார்கள்;. கௌரவிக்கிறார்கள்;;;. கெட்ட எண்ணத்துடன் அவளை அணுக முனைய மாட்டார்கள். அந்த வகையில் ஹிஜாப் உடை பெண்ணின் பாதுகாப்;பிற்கான உத்தரவாதமாக விளங்குகிறது. இந்த உண்மையை அல்குர்ஆன் அழகாகச் சொல்கிறது.

''நபியே! உங்களது மனைவிகள், உங்களது புதல்விகள் மற்றும் முஃமின்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறுவீராக! அவர்கள் தங்கள் முந்தானைகளை தம்மீது போட்டுக் கொள்ளட்டும். இது அவர்களை அறியப்படுத்துவதற்கும் அவர்கள் தொல்லைகளுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கும் மிகவும் ஏற்ற முறையாகும்.''(அஹ்ஸாப் :59)

இந்த வசனத்தில் 'அவர்கள் அறியப்படுவதற்கு' அவர்களின் 'ஜில்பாப்' எனும் முந்தானை உதவும் என்பதன் பொருள் இந்த அடக்கமான உடை, அந்தப் பெண் ஒரு கௌரவமான, கற்புடைய, அடக்கமும், நாணமும் உடைய தூய்மையான ஒரு பெண் என்பதை பிறர் அறிய உதவும் என்பதாகும். ஒரு பெண் ஹிஜாபை பேணாத போது எவ்வாறு பாதுகாப்பை இழக்கிறாள் என்பதை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்:

'எவரேனும் ஒரு பெண் தனது கணவனது வீடல்லாத மற்ற இடங்களில் தனது ஆடைகளை களைவாளாயின் அவள் தனக்கும் அல்லாஹ்வுக் குமிடையே உள்ள தனக்கான பாதுகாப்பை -மறைப்பை- தகர்த்துக்கொள்கிறாள்.'

இந்த ஹதீஸின் மூலம் நபி (ஸல்) அவர்கள் கூறவரும் கருத்து யாதெனில், ஒரு பெண் தனது ஆடைகளைக் களைவதன் மூலம் தனக்கிருந்த பாதுகாப்பை நீக்கி அந்நியருக்கு தனது அழகை காட்டும் போது அவள் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருந்து நீங்கிக் கொள்கிறாள் என்பதாகும்.

மேலும் பெண்கள் ஹிஜாப் உடையை ஷரீஆ வரையறைகளைப் பேணி முறையாக அனுஷ்டிக்கின்ற போது சமூக உறுப்பினர்களும் சூழலும் தூய்மை பெற வழிபிறக்கிறது. ஹிஜாப் பார்வைக்கு திரையிடுகிறது. தீய எண்ணங்கள் ஏற்படாமல் இருக்க வழியமைக்கிறது. பித்னா விளைவதை தடுக்க துணைபுரிகின்றது. இதனால் உள்ளங்கள் தூய்மை பெறுகின்றன. அத்துடன் ஹிஜாப் நோயுற்ற உள்ளங்களுக்கு வேலியாகவும் அமைகின்றது. காலக்கிரமத்தில் அத்தகைய உள்ளங்களும் கூட திருந்தி தூய்மை அடைய இது வழிவகுக்கிறது.

''(நபியின் மனைவியான) அவர்களிடம் நீங்கள் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால் திரைக்குப் பின்னால் இருந்து கேளுங்கள். உங்களதும், அவர்களதும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே மிகவும் ஏற்ற முறையாகும்.''(அஹ்ஸாப்:53)

இஸ்லாம் வெட்;கமெனும் பண்புக்கு கூடிய முக்கியத்துவம் அளிக்கிறது.

'ஒவ்வொரு மதத்திற்குமுரிய ஒரு விஷேட ஒழுக்கப் பண்பு உண்டு. இஸ்லாத்திற்குரிய ஒழுக்கப் பண்பு வெட்கமாகும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.' (முவத்தா)

'வெட்கம் ஈமான் சார்ந்தது. ஈமான் சுவனத்திற்குரியது' என்பதும் ஒரு நபிமொழி. (திர்மிதி)

'வெட்கமும் ஈமானும் ஒன்றோடொன்று இணைந்தவை. பின்னிப்பிணை ந்தவை. இவற்றுள் ஒன்றை எடுத்துவிட்டால் மற்றதும் எடுபட்டு விடும்' என்ற ஹதீஸும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். (ஹாகிம்)

இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த வெட்க உணர்வு ஆண்களை விட பெண்களிடம் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்தகைய வெட்க உணர்வின் அடையாளமாகவும் வெளிப்பாடாகவும் இருப்பதே பெண்களுக்குரிய இஸ்லாமிய உடையாகும்.

ஆயிஷா (ரழி) அவர்கள் சொல்கிறார்கள்: 'ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களும் எனது தந்தையும் அடக்கம் செய்யப்பட்ட அறையினுள் நான் எனது மேலாடை இல்லாது பிரவேசிப்பது வழக்கமாக இருந்தது. அவர்கள் இருவரும் எனது கணவரும், தந்தையும் தானே என்ற கருத்திலேயே அப்படி நான் நடந்து கொண்டேன். எனினும் உமர் (ரழி) அவர்கள் அங்கு அடக்கப்பட்ட பின்னர் அதனால் எனக்கேற்பட்ட கூச்ச உணர்வின் காரணமாக நான் மேலாடையில்லாது அந்த அறையினுள் பிரவேசிப்பதில்லை.' (இப்னு அஸாகிர்)

அந்நிய ஆடவர் விடயத்தில் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் எத்தகைய கருத்தை கொண்டிருந்தார்கள் என்பதை இச்சம்பவம் காட்டுகின்றது. மரணத்திற்குப் பின்னாலேயே அவர்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால் உயிரோடிருப்பவர்களுக்கு முன்னால் எப்படி நடந்து கொண்டிருப்பார்கள் என்பதை ஊகிக்க முடியும்.

உண்மையில் அந்நிய ஆண்களுக்கு முன்னால் பெண்கள் இந்தளவு நாணத்துடனும் அடக்கமாகவும் நடந்து கொள்ளல் வேண்டும் என்பதே இஸ்லாமிய ஷரீஆவின் எதிர்;பார்ப்பாகும். மற்றொரு நபிமொழி இங்கு எமது சிந்தனைக்குரியதாகும்.

'அல்லாஹ் நாணமிக்கவன். மிகவும் மறைந்திருக்கக் கூடியவன். அவன் வெட்கத்தையும், மறைப்பையும் விரும்புகிறான்.' (அபூதாவுத்)

இந்த ஹதீஸ் வெட்க உணர்விற்கும் மறைத்தலுக்கும் இடையே உள்ள இறுக்கமான தொடர்பை எடுத்துக்காட்ட போதுமானதாகும்.

அனைத்திற்கும் மேலாக ஹிஜாப் ஈமானினதும், தக்வாவினதும் வெளிப்பாடாக விளங்குகிறது. அல்லாஹ் அல்குர்ஆனில் ஈமான் கொண்ட பெண்களை விளித்துத்தான் ஹிஜாபை அணியுமாறு பணிக்கிறான். ஈமானின் பெயராலேயே இது பற்றிய கட்டளைகள் வந்துள்ளன. ''நபியே! முஃமினான பெண்களைப் பார்த்துக் கூறுங்கள்'' முஃமின்களின் மனைவியர் என்றே ஹிஜாப் பற்றிய வசனங்கள் அமைந்துள்ளன.

பனூதமீம் கோத்திரத்தைச் சேர்ந்த சில பெண்கள் ஒரு முறை அன்னை ஆயிஷா (ரழி) அவர்களைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் மெல்லிய ஆடை அணிந்திருந்தார்கள். இதை அவதானித்த ஆயிஷா (ரழி) அவர்கள், அவர்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார்கள்:

'உண்மையில் நீங்கள் முஃமினான பெண்களாயின் அணிந்திருக்கும் இந்த ஆடைகள் ஈமான் கொண்டவர்களுக்குரிய ஆடைகள் அல்ல. நீங்கள் ஈமான் கொள்ளாத பெண்களாயின் இதனை அணியுங்கள்.'

'ஹிஜாப்' என்பது பெண்கள் தமது 'அவ்ரத்'தையும், அழகையும், உடலின் கவர்ச்சியான பகுதிகளையும் மூடிமறைத்துக் கொள்வதற்கு இஸ்லாம் தந்துள்ள உடை அமைப்பாகும். இதற்கெதிரானது 'தபர்ருஜ்' எனும் வட்டத்தில் அடங்கும்.

'சிலவேளை ஒரு பெண் மற்றவரின் கவனத்தை ஈர்க்கும் எண்ணத்துடன் தலையை மூடும் துணியை பளிச்சிடும் பல வண்ண நிறத்தில் கவர்ச்சிகரமாக அணிந்தால் அதுவும் 'தபர்ருஜ்' எனும் தடை செய்யப்பட்ட கவர்ச்சிகாட்டலாகும்;' என மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் தனது அல்ஹிஜாப் எனும் நூலில் விளக்குகிறார்கள்.

ஹிஜாபிற்கு எதிரான 'தபர்ருஜ்' ஐத் தடைசெய்யும் அல்குர்ஆன் வசனம் பின்வருமாறு கூறுகிறது:

''மேலும் உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முன்னைய ஜாஹிலிய்யாக் காலங்களில் (பெண்கள்) வெளிப்படுத்தியது போன்று வெளிப்படுத்தாதீர்கள்.''(அஹ்ஸாப்: 33)

உமையா பின்த் ருகையா (ரழி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்காக நபியவர்களிடம் வந்தபோது அன்னார் அவருக்குப் பின்வருமாறு அறிவுறுத்தினார்கள்:

'நீர் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்கக்கூடாது, திருடக் கூடாது, விபசாரத்தில் ஈடுபடக் கூடாது, நீர் உமது குழந்தைகளைக் கொல்லக் கூடாது, அவதூறு கூறலாகாது, ஓலமிட்டு அழுது புலம்பக் கூடாது, நீர் ஜாஹிலிய்யத்தில் போல 'தபர்ருஜ்' எனும் அழகையோ கவர்ச்சியையோ வெளிக்காட்டக் கூடாது.' (அஹ்மத்)

இங்கு நபி (ஸல்) அவர்கள் பெரும் பாவங்களின் வரிசையில் 'தபர்ருஜ்'யைக் குறிப்பிட்டிருப்பதைக் காணமுடிகிறது. (Br. Agar Mohamed Plus*)

Home                 Sri Lanka Think Tank-UK (Main Link)

சுவர்க்குத்துப் பெண்களின் தலைவி

ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கி றார்கள்: இறை தூதரின் மரணத்திற்கு முன்னர் ஒருநாள் நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருந்தோம். பாத்திமா (ரழி) அவர்கள் அங்கு வருகை தந்தார். பாத்திமா (ரழி) நடந்து வருவதைப் பார்த்தால் இறைதூதர் (ஸல்) அவர்கள் நடந்து வருவதைப் போலவே இருக்கும்......

பாத்திமாவைக் கண்டதும் வாஞ்சையோடு வரவேற்ற இறைதூதர் தமது வலது பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்கள். பாத்திமா வின் காதருகே சென்று ஏதோ கூறினார்கள். அதைக் கேட்ட மாத்திரத்திலேயே பாத்திமாவின் உதடுகள் துடித்து பொங்கி அழலானார்கள். பாத்திமா அழுவதைக் கண்ட இறைதூதர் மறுபடியும் காதருகே சென்று ஏதோ கூறினார்கள். அதைக் கேட்டவுடன் பாத்திமா சிரிக்கத் தொடங்கினார்.

இதைப் பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. பாத்திமாவை அழைத்து என்ன நடந்தது? என்ன கூறினார்கள்? என்று கேட்டேன். ஒரே நேரத்தில் உங்களை அழ வைக் கும்படியாகவும் சிரிக்க வைக்கும்படியாகவும் அப்படியென்னதான் இறைதூதர் கூறினார்கள்? என்று கேட்டேன். அதை இப்போது என்னால் சொல்ல இயலாது என்று பாத்திமா கூற மறுத்துவிட்டார்.

இது நடந்து சில நாட்களுக்குப் பின் இறை தூதர் (ஸல்) மரணித்து விட்டார்கள். அதன்பின் மறுபடியும் ஒருநாள் பாத்திமாவிடம் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு காரணத்தைக் கேட்டேன்.

"இப்போது என் அருமைத் தந்தையார் மரணித்துவிட்டார்கள். எனவே, தயங்காமல் சொல்ல முடியும். முதலில் தந்தையார் என் காதில் கூறினார்கள், "எப்போதும் வருடத்தில் ஒரு முறை ரமழான் மாதத்தில் என்னை ஒருதடவை குர்ஆன் ஓதச் சொல்லி ஜிப்ரீல் (அலை) கேட்பார்கள். இந்த வருடம் இரண்டு தடவை ஓதச் சொல்லிக் கேட்டார்கள். இந்த வருடத் திற்குள் எனக்கு மரணம் வந்துவிடும் என்று நினைக்கிறேன். என் மரணத்தைத் தொடர்ந்து என் குடும்பத்திலிருந்து முதன்முதலில் என்னைச் சந்திக்கப்போவது நீதான்."

அதைக் கேட்டவுடன் எனக்கு துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது. தாங்க முடியாமல் தேம்பி அழலானேன். மறுபடியும் காதருகே வந்து "உலகப் பெண்களுக்கெல்லாம் சொர்க் கத்தின் தலைவியாக இருப்பதை நீ விரும்பவில் லையா?" என்று தந்தையார் கேட்டார்கள். அதைக் கேட்டவுடன் சந்தோசம் தாங்காமல் சிரிக்கலானேன்" என்று பாத்திமா (ரழி) அவர்கள் கூறினார்கள்.

இறை தூதர் மரணித்து சரியாக 06 மாதங் களின்பின் பாத்திமா (ரழி) வபாத்தானார்கள். (Women in Islam/Ends)

Home                  Sri Lanka Think Tank-UK (Main Link)

கணவனின் திருப்தியைப் பெறுதல்

*கணவனின் உள்ளத்தில் இடம் பிடிப்பதற்கான பல வழிமுறைகள் காணப்படுகின்றன. அவற்றில் மென்மையான பேச்சு, குடும்ப வாழ்வின் இரகசியங்களைப் பாது காத்தல், வணக்க வழிபாடுகள், அழகிய உடை மற்றும் நறுமணம், சிறந்த உணவுகளை வழங்குதல் என்பன முக்கியமானவையாகும்.


01. மென்மையான பேச்சு: கணவனை புன்னகையோடு அழையுங்கள். புன்னகையோடு விடைகொடுங்கள். அவனுடைய நிலைமைகள்பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவனுடைய வேலை களில் தலையிட வேண்டாம். அவனிட மிருந்து நல்ல வார்த்தைகளைக் கேளுங்கள். மென்மையான வார்த்தைகளை வெளிப்படுத்துங்கள். அவன் ஏதும் தவறுகள் செய்தால் நிந்திக்காதீர்கள். அவன் ஏற்றுக் கொள்கின்ற வகையில் அதனைத் தெளிவுபடுத்துங்கள். அவன் ஏதேனும் கேட்டால் மறுக்காதீர்கள். மோசமான வார்த்தைகளைக் கொண்டு முரண்படாதீர்கள். அது உங்களுடைய குடும்ப வாழ்வில் பிளவை ஏற்படுத்துவிடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ஒரு பெண் ஐவேளைத் தொழுகைக ளையும் நிறைவேற்றி, ரமழான் நோன்பை நோற்று, தனது கற்பைப் பாதுகாத்து, தனது கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவளுக்கு பின்வருமாறு கூறப்படும். நீங்கள் விரும்பிய வாயிலினூடாக சுவனத்தில் நுழைந்து கொள்ளுங்கள்.

02. குடும்ப வாழ்வின் ரகசியங்களைப் பாதுகாத்தல்: குடும்ப வாழ்வின் ரகசியங்களை மனைவி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவற்றை வீட்டுக்கு வெளியில் வெளிப்படுத்தக் கூடாது. வீட்டையும் பொருட்களையும் பாதுகாத்துக் கொள்ளுங் கள். கணவன் இல்லாதபோது எந்தவொரு அந்நியனையும் உள்ளே நுழைய அனும திக்க வேண்டாம். வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்பினால் கணவனின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களது வாழ்க்கைக்குப் பாதுகாப் பாக அமையும். அவனுடைய செல்வங்களையும் குடும்பத்தையும் நல்ல முறை யில் கவனித்துக் கொள்ளுங்கள்.

03. வணக்க வழிபாடுகள்: அல்லாஹ்வை ஞாபகப்படுத்த மறக்க வேண்டாம். தொலைக்காட்சியையோ அல்லது வேறேதேனு மொன்றையோ அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதை விட்டும் தடுக்கும் பொருளாக மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய உள்ளம் இறந்துப் போய்விடும். கணவன் தொழுகையை மறந்தால் அவனுக்கு ஞாபகமூட்டுங்கள். அவனுக்கு முன்னால் நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஐந்நேரத் தொழுகைகளையும் பேணித் தொழுது கொள்ளுங்கள்.

04. அழகிய உடை மற்றும் நறுமணம்: உங்கள் கணவனுக்கு மிக அழகான ஆடை களை அணிந்து வெளிப்படுங்கள். அவனுக்காக நறுமணம் பூசிக் கொள்ளுங்கள். எந்தவொரு கணவனும் தனது மனைவியின் அழகிய தோற்றத்தை விரும்புவான். அவனுக்கு விருப்பமான நிறங்களில் ஆடை அணியுங்கள். வீட்டினுள் இருக்கும் போது அவனுக்காக உங்கள் அலங்காரங்களை வெளிப்படுத்துங்கள். அவனோடு மெல்லிய குரலில் பேசுங்கள். இதனால் அவனது அன்பு அதிகரிக்கும்.

05. சிறந்த உணவுகளை வழங்குதல்: உங்கள் கணவனுக்கு மிகச் சிறந்த உணவு களை தயாரித்து வழங்குங்கள். அவனுக்காக உறங்குவதற்கு படுக்கையைத் தயார் படுத்தி வையுங்கள். அவனுக்கு பணியாற்றுவதற்காக எந்தவொரு பணிப்பெண் ணையும் நியமிக்காதீர்கள். கணவனுக்கு விருப்பமான உணவுகளைக் கேட்டு தயா ரித்துக் கொடுங்கள்.

இந்த வழிமுறைகள் சில ஆலோசனைகள் மட்டுமே. இவை தவிர்ந்த இன்னும் பல வழிமுறைகளும் காணப்படுகின்றன. (Meelparvai & Women in Islam in FB) (Ends)

Home                 Sri Lanka Think Tank-UK (Main Link)