Pages

Thursday 1 October 2015

தவக்குல் கர்மான்- யார் இவர் ?



நோபல் பரிசு பெரிசு பெற்ற முதல் அரேபிய பெண்மணி எப்படி போர்க்கள நாயகி ஆனார் ?  இவர் பற்றிய சுவாரஸ்யங்கள் ஏராளம் உண்டு. தவக்குல் பிறந்தது ஏமன் நாட்டில். 2011 ல்  'அலி அப்துல்லா சாலே' அரசுக்கு  எதிரான பேரணிக்கு மாணவர்களை ஒருங்கிணைத்து எதிர்த்ததும் அதனைத் தொடர்ந்து அவர் சிறை சென்றும் கூட விடுதலையான அடுத்த நாளே மீண்டும் பெரும் போராட்டத்தை நிகழ்த்தியதும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இன்று இருக்கும் இந்த இடத்திற்கு அவர் அத்தனை எளிதில் வந்துவிடவில்லை என்பதைக் காணும்போது நம் ஒவ்வொருவருக்கும் பிரமிப்பு ஏற்படுவது உறுதி.
 
இஸ்லாமிய நாட்டில் பெண்கள் வீதிக்கு வந்து போராடியது ஏன்? இதற்கான விடை தெரிய வேண்டுமானால் ஏமனின் அரசியல் வரலாற்றை கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் பரவிக்கிடக்கும் நாடு தான் ஏமன். வடக்கே சவுதி அரேபியா கிழக்கில் ஓமான். 19 நூற்றாண்டின் ஏமனின் ’சனா’வைத்  தலைநகரமாகக் கொண்டு துருக்கிய  ஒட்டமான்கள் ஆட்சி செய்தனர். ஏமன் ஒரே நாடாக இருந்தாலும் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட வடக்கு ஏமன் தனியானதாகவும் பிரிடிஷ் காலனியாகத் தெற்கு ஏமன் தனியானதாகவும் கருதப்பட்டன.

1962 ம் ஆண்டில் ஒரு கிளர்ச்சியில் மன்னராட்சி முடிவுக்கு வந்து வடக்கு ஏமன் அரபுக் குடியரசு என்றும் 1967 ம் ஆண்டில் தெற்கு ஏமன் பிரிட்டிஷ் பிடியில் இருந்து விடுபட்டு ஏமன் மக்கள் ஜனநாயக கட்சியும் மலர்ந்தது. இப்போது  நம்ம பெரிய அணணன் அதாங்க அமெரிக்கா சவுதியோடு சேர்ந்து கொள்ள,மத்திய கிழக்கில் அமைந்த ஒரே கமியூனிச நாடான தெற்கு ஏமனை யாரு ஆதரிச்சிருப்பா? வேறு யாரு ரஷ்யா தான். அய்யோ பாவம் ரஷ்யாவும் சிதறிப்போன பின் தெற்கு ஏமன் நிலை குலைந்துப்போனது .  


ஆனால் வட தென் ஏமனின் எல்லைப் பகுதியில் எண்ணெய் வளம் இருப்பது கண்டறியப்பட்டது.சும்மா இருப்பாரா பெரிய அண்ணன்?? சரி சரி நீங்க இனி சண்டை அடிச்சுக்க வேண்டாம் ஒன்றாக இருந்துக்கங்க என்று ரெண்டு பேரையும் பழம் விட வைத்து 1990 ஆம் ஆண்டு ஏமன் ஒரே நாடானது .  ஒருகிணைந்த ஏமனுக்கு கர்னல் அலி அப்துல்லாஹ் சாலே அதிபராகப் பொறுப்பேற்றார்.வட ஏமன் ஷியா பிரிவு தென் ஏமன் சன்னி பிரிவு. எண்ணையும் தண்ணீரும் கலக்குமா?

தெற்கு ஏமன் பாரபட்சமாக நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பொருளாதார நெருக்கடி வறுமை உணவுத் தட்டுப்பாடு என்று மக்கள் அல்லல் பட்டு வேறு வழியில்லாமல் போராட ஆரம்பித்தார்கள். 2004 ஆம் ஆண்டு ஹூசைன் அல் ஹூத்தி ஒரு இயக்கத்தை ஆரம்பித்து சாலே அரசை எதிர்த்தார்.  ஆதலால் அவர்  கொல்லப்பட்டார். ஆனால் அவரது இயக்கம் அரசுக்கு எதிராய் வலுத்தது . 

தவக்குலின் தந்தை அப்தெல் சலாம் ஒரு வழக்கறிஞர். சாலே வின் கட்சியின் சட்ட அமைச்சராக இருந்தாலும் அதை வெறுத்தார். இவர் தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக்  கொடுத்தார். தந்தையின் ஊக்கத்தோடு வளர்ந்த தவக்குல் இள நிலை வணிகவியல் முதுநிலை பொலிட்டிக்கல் சயின்ஸும் படித்தார். இதன் நடுவே முஹம்மது அல் நஹ்மியை சில நிபந்தனைகளை முன் வைத்தே திருமணத்தை ஏற்றுக்கொண்டார். 
அவை:
* திருமணத்திற்குப் பின் என் படிப்பை நிறுத்தக்கூடாது.
* பர்தா அணிவதால்  முடங்கிப் போக மாட்டேன்.
* இந்த சமூகத்துக்காகவும்  பெண்களுக்காகவும் களம் இறங்கிப் போராடுவேன்.


கர்மானின்  நிபந்தனைகளை நஹ்மியும் ஏற்றுக்கொண்டு அவருக்கு பக்கபலமாய்  உதவினார். சாலேவின் சர்வதிகார ஆட்சிக்கு எதிராக  இவர் எடுத்துக் கொண்ட ஆயுதம் "பேனா''. சக பெண்கள் ஏழு பேருடன் சேர்ந்து "சங்கிலிகள் இல்லாத பெண் இதழியலாளர்கள்’( women journalists without chains) பத்திரிகைச் சுதந்திரத்திற்காகப் போராடும் அமைப்பை நிறுவி அதன் மூலம் அநீதிக்கு எதிராய் களமாடினார் கர்மான் .

முகத்திரை அணிவது பாரம்பரிய வழக்கமே தவிர அதை இஸ்லாம் வலியுறுத்தவில்லை என்று துணிந்து கூறினார்.  தலையை மறைக்கும் ஹிஜாப் அணிந்து இந்த சமூகத்தை எதிர்கொண்டார். யாரும் பேசத்தயங்குவதையும் யாரும் செய்யாததையும் புதிதாய் செய்யும் போது இந்த சமூகம் எப்படி பார்க்குமோ அப்படிதான் கர்மானை பார்த்தது. பைத்தியக்காரி பெண்ணே அல்ல பேய், தண்டிக்கப்பட வேண்டியவள் என்றும் பல வசை மொழிகளை வாங்கிக்கட்டிக்கொண்டார்.  துனிசீயாவில் ஏற்பட்ட ஜாஸ்மின் புரட்சியும் 30 ஆண்டுகளாக எகிப்தை ஆண்ட ஹொஸ்னி முபாரக் இளைஞர் புரட்சியால் தூக்கி எறியப்பட்டார்.

இவை அனைத்தையும் அப்படியே ஏமன் மக்களிடம் முன்வைத்தார் தவக்குல். 2011 ஆம் ஆண்டு அரேபிய வசந்தம் என்னும் ஏமன் மக்கள் புரட்சி ஆரம்பமானது.

ஆயுதப்போராட்டங்கள் என்றைக்கும் தீர்வைத் தரப்போவதில்லை காந்தி, மார்ட்டின் லூதர் கிங், மண்டேலா இவர்களின் அகிம்சையே நம் ஆயுதம் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் தவக்குல்.மார்ச் மாதம் இவர்கள் மீது ஏவப்பட்ட வன்முறையில் 12 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் 13 பேர் இன்னொரு போராட்டத்தில் கொல்லப்பட்டனர்.  அழுகையை விழுங்கி எஞ்சியுள்ளோரை மருத்துவமனையில் சேர்த்து மீண்டும் போராட்ட சதுக்கத்துக்கு வருகிறார் இந்த போர்க்களப் பூ. எத்தனை பேரைக் கொன்றாலும் போராட்டம் ஓயாது என்கிறார். 
2012 பிப்ரவரி மாதத்தில் 34 ஆண்டுகள் ஆண்டு அனுபவித்த அதிபர் பதவியை சாலே துறந்தார்.அதுவரை துணை அதிபராக இருந்த மன்சூர் ஹாதி ஏமனின் புதிய அதிபரானார். உள்நாட்டு குழப்பம், ஐ.எஸ் அமைப்பின் மிரட்டல், மனித வெடிகுண்டு தாக்குதல், மறுபடியும் ஹூத்தி கிளர்ச்சிப் படைகள் தலை நகர் சனாவை கைப்பற்றியதாக அறிவிக்க, அதிபர் ஹாதி சவுதிக்குத் தப்பிச்சென்றார்.இப்போது சவுதி விமானங்கள் குண்டு மழைப்பொழிய ஏமனின் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. 

அகிம்சை வழியில் ஏமனின் வரலாற்றில் பெரும்பங்கற்றிய கர்மான், 2011ம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை லிபேரியா நாட்டின் எல்லென் ஜான்சன், லேமா குபோவீ ஆகியோருடன் சேர்ந்து பெண்கள் பாது காப்பு, சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், பெண்கள் உரிமைகளுக்கான வன்முறையற்ற போராட்டம் ஆகியவற்றுக்காகப் பெற்றார். இதன் மூலம் நோபல் பரிசை வென்ற முதல் அரேபிய பெண்  மற்றும்  2ம் முஸ்லிம் பெண் என்ற பெருமையும் பெற்றார். உலகிலேயே இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற பெண்ணும் இவர்தான். சமீபத்தில் தான் இந்த இடம் வேறொரு பெண்ணால் நிரப்பப்பட்டது.  


சகோதரி கர்மான்  பேச்சுத்திறன் மிக்கவரும் கூட. ஒருமுறை அவர் அணிந்திருக்கும் ஹிஜாப்  பற்றி பத்திரிக்கையாளர்கள் அவருடைய அறிவுத்திறனுக்கும், கல்வித்தகுதிக்கும் அது ஏற்றதாக உள்ளதா என கேட்ட போது அவர் கூறிய பதில்: 'பண்டைய கால மனிதன் பெரும்பாலும் நிர்வாணமாக இருந்தான். அவன் அறிவு வளர வளர அவன் ஆடைகளை அணியத் துவங்கினான். நான் இன்று யாராக இருக்கிறேனோ, என்ன அணிந்திருக்கிறேனோ, அது மனிதன் அடைந்துள்ள எண்ணங்கள் மற்றும் நாகரிகத்தின் உச்சத்தை பிரதிபலிக்கிறதே தவிர, பின்னடைவையல்ல. ஆடைகளை மீண்டும் களைவது தான் பின்னடைவாகும்.' என்றார் நெத்தியடியாக. ஏமன் நாட்டு மக்களால் இரும்பு பெண்மணி என்றும் புரட்சித்தாய் என்றும் புகழப்படுகிறார் கர்மான். 

அச்சுறுத்தல்கள் பல பக்கங்களில் இருந்து வந்தாலும் தன் கருத்துக்களை அழுத்தமாக முன்வைத்து கொண்டிருக்கிறார் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய். "வரலாற்றை திருப்பிப் பாருங்கள் மக்கள் புரட்சிக்குப் பிறகு உடனே எங்குமே ஜனநாயகம் மலர்ந்து விடுவதில்லை. அதற்குக் காலம் கொஞ்சம் எடுக்கும்.  ஏமனில் ஒரு நாள் ஜனநாயகம் மலரும்" என்று நம்புகிறார் இந்த போர்க்கள நாயகி. இன்ஷா அல்லாஹ் 
உங்கள் சகோதரி 
சபிதா காதர்

நன்றி:
விகடன், 
தி ஹிந்து,
 விக்கிப்பீடியா
 (islamiyapenmani)

Home             Sri Lanka Think Tank-UK (Main Link)

No comments:

Post a Comment